திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சோலைஹால் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி காந்தி மார்க்கெட் தொகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிப்டாப் உடைய அணிந்த நபர் மூதாட்டியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அப்போது வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லை என மூதாட்டி புலம்பியபடி தெரிவித்துள்ளார்.

அப்போது அந்த நபர் தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலமாக முதியோர் உதவி தொகை வாங்கி தருமாறு கூறினார். இதனை தொடர்ந்து என்னோடு வந்தால் அரசு அதிகாரியை சந்தித்து விண்ணப்பித்து உடனே உதவிதொகை வாங்கி தருவதற்கு ஏற்பாடு செய்வேன் என அந்த நபர் கூறினார். இதனை உண்மை என நம்பிய பிச்சையம்மாள் அந்த நபருடன் சென்றார். இருவரும் திண்டுக்கல்- மதுரை சாலையில் கலிக்கம்பட்டி பிரிவு அருகே சென்ற போது நீங்கள் தங்க நகை அணிந்து இருந்தால் உதவி தொகை தர மாட்டார்கள் அதனை கழற்றி தாருங்கள் என கூறினார்.

சிறிதும் யோசிக்காமல் மூதாட்டி தனது 4 பவுன் கம்மல் மற்றும் மோதிரத்தை கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து மூதாட்டியை ஒரு இடத்தில் ஓரமாக நிற்கும் படி சொல்லிவிட்டு அதிகாரியை சந்தித்து வருகிறேன் எனக் கூறி அந்த நபர் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பிச்சையம்மாள் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.