
சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை ஏழுகிணறு பூந்தோட்டம் 2-வது தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஷ்மிதா(18) என்ற மகள் உள்ளார். இவர் அடையாறு பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவி பரங்கிமலையைச் சேர்ந்த நவீன் என்பவருடன் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது.
சமீப காலமாக அஷ்மிதா நவீனுடன் நட்பை துண்டித்து விட்டு அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் அஷ்மிதா பரங்கிமலை ஏழுகிணறு இரண்டாவது தெரு பகுதியில் நடந்து சென்ற போது நவீன் அவரை வழிமறித்து தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அதற்கு அஷ்மிதா மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த நவீன் கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனால் படுகாயமடைந்த அஷ்மிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அஷ்மிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான நவீன தேடி வந்தனர். சினிமா பாணியில் அவரை போலீசார் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்ற நவீனை பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.