தேனி மாவட்டத்தில் உள்ள துரைராஜபுரம் காலணியில் விவசாயியான காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் துரைராஜபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் எனக்கும் நிலப் பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இது தொடர்பாக தேனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதனையடுத்து குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் தன்னை வழக்கறிஞர் என கூறி, நில பிரச்சனையை தீர்த்து வைப்பதாக தெரிவித்தார்.

இதற்காக ராஜசேகர் என்னிடமிருந்து 3 லட்ச ரூபாய் பணத்தை வாங்கினார். ஆனால் வழக்கில் ராஜசேகர் ஆஜராகவில்லை. இதனால் ஈஸ்வரனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனை தொடர்ந்து நான் விசாரித்து பார்த்த போது ராஜசேகர் வழக்கறிஞர் இல்லை என்பதும், பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காந்தி புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.