கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் உப்பிபாளையத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் பணத்தை முதலீடு செய்து நாங்கள் கூறும் பணியை நிறைவேற்றி கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனை நம்பி லட்சுமி பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தவுடன் அவரது வங்கி கணக்கிற்கு 14 ஆயிரம் ரூபாய் வந்தது. இதனையடுத்து பல்வேறு தவணைகளாக லட்சுமி அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 21 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு மர்ம நபர் லட்சுமியை தொடர்பு கொண்டு பேசவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த லட்சுமி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.