விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தது குறித்து பாமகவின் கருத்து என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,

யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அது டாக்டராக இருந்தாலும் சரி,  ஆக்டராக இருந்தாலும் சரி…  அப்படி கட்சி தொடங்கி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். எங்கள் கட்சியை தொடங்கிய நோக்கம் ”சமூக நீதிக்காக” இன்று இந்தியாவில் இரண்டு இட ஒதுக்கீடுகளை பெற்று தந்தது பாட்டாளி மக்கள் கட்சி. தமிழ்நாட்டில் நான்கு இட ஒதுக்கீடுகளை பெற்று தந்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.

ஆக மொத்தம் பாட்டாளி மக்கள் கட்சியால் தமிழ்நாட்டுக்கும்,  இந்தியாவுக்கும் ஆறு இட ஒதுக்கீடுகளை பெற்றிருக்கிறோம்.  அதுமட்டுமில்லாமல் இன்று தமிழ்நாட்டிலேயே பூரண மதுவிலக்கு வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி தொடர் போராட்டத்தினால்,  இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நாங்களும் மதுவிலக்கு கொள்கையை கொள்கை ரீதியில் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.  இதுவரை அதை பற்றி பேசாத திராவிட கட்சிகள் எங்களுடைய அழுத்தத்தால் அவர்களும் இன்று ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். 

அதுமட்டுமில்லாமல் பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாது என்று சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி,  குட்காவை இந்தியாவிலிருந்து தடை செய்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி,   புகையிலை பொருட்கள் எச்சரிக்கை விளம்பரங்களை கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி,  இந்தியாவிலேயே 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி,  உலகத்தில் மிகப்பெரிய சுகாதார திட்டம் என்று இந்தியாவிலே தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தை கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி என பேசினார்.