பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் சோன்பர்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்தர்வா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுரேந்திர குமார் என்பவரது திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மணமகளுடன் அமர்ந்து இருந்தார். அங்கு கொண்டாட்டமான சூழல் நிலவி வந்ததால் இளைஞர்கள் சத்தத்தை அதிகமாக வைத்து இசையில் நடனமாடக் கொண்டிருந்தனர். இதனையடுத்து சத்தத்தை குறைக்க வேண்டும் என மணமகன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் அவர் சொல்வதை யாரும் பொருட்படுத்தவில்லை. அதனை தொடர்ந்து மணமகள், மணமகன் மாலை மாற்றிக் கொண்டனர். மணமகளது கழுத்தில் சுரேந்திர குமார் மாலை அணிவித்த அடுத்த நொடியில் மேடையில் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இசையின் பலத்த சத்தத்தின் காரணமாக சுரேந்தர் இறந்ததாக ஊர்வலத்தில் ஒருவர் கூறியுள்ளார். திருமண நிகழ்ச்சியில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.