பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அண்மையில் நடித்த “பதான்” படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகியது. இது உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் அதிக நாட்கள் ஓடி 1000 கோடி ரூபாய்கும் மேல் வசூல் செய்து வருகிறது. பதான் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என ஷாருக்கானுக்கு எதிராக அரசியல் கட்சிகளும், மதம் சார்ந்த சில அமைப்புகளும் போர்க் கொடி உயர்த்தியது. அதோடு ஷாருக்கானின் உருவ பொம்மையை எரித்தனர். எனினும் பதான் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் ஷாருக்கான் மனைவி கவுரிகான் மீது சொத்து அபகரிப்பு, நம்பிக்கை மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் லக்னோவை சேர்ந்த ஜஸ்வந்த் ஷா என்பவர் புகாரளித்திருக்கிறார். அதன்படி லக்னோ காவல்துறையினர் கவுரிகான் மீது முதல் தகவலறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். லக்னோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்தூதுவராக கவுரிகான் உள்ளார். அந்நிறுவனத்தில் வீடு வாங்க ஜஸ்வந்த் ஷா 86 லட்சம் ரூபாய் கட்டி இருந்ததாகவும் குறித்த நாளில் வீட்டை ஒப்படைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நிறுவனர்கள் மீதும் விளம்பர தூதுவராக இருக்கும் கவுரிகான் மீதும் புகார் கொடுத்திருப்பதாக தெரிகிறது.