விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அச்சம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பொங்கல் விழாவின் போது குறிப்பிட்ட அரசு பொது இடத்தை பொதுமக்கள் முளைப்பாரி போடும் இடமாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமித்ததால் முளைப்பாரி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது. இதனால் பக்தர்கள் முளைப்பாரிகளை வளர்க்க குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற போது அந்த நபர் பொதுமக்களை தடுத்ததாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காரியாபட்டி மெயின் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காரியாபட்டி தாசில்தார் விஜயலக்ஷ்மி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புறம்போக்கு இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி முளைப்பாரி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.