அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் இருக்கும் சாலையில் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அரியலூர் பேருந்து நிலையத்திற்கு முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசாரும், நகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து கழிவுநீர் சுத்திகரிப்பு எந்திரம் கொண்டுவரப்பட்டு கழிவுநீர் அகற்றப்பட்டது.