கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மொட்டையனூர் கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டுஉறை விட தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 55 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளியில் ஒரு அறை மட்டுமே இருக்கிறது. அந்த அறையில் பள்ளியறை ஒருபுறமும் சமையலறை மற்றொரு புறமும் செயல்பட்டு வருகிறது. கழிப்பறை வசதி இல்லை.

இந்நிலையில் பள்ளி கட்டிடம் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் பெயர்ந்து விழுந்து மாணவர்களுக்கு காயம் ஏற்படுவதாக புகார்கள் வந்தது. தற்போது கன மழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் ஒழுகி கட்டிடம் இடிந்து விடும் நிலையில் இருக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகத்தில் இருக்கும் மரத்தடி நிழலில் மாணவர்கள் படித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.