நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். இவர் குஜராத் மக்களிடையே மட்டும்  பிரபலமாக இருந்த பிரதமர் மோடியை நாடு முழுவதும் பிரபலமாக்கினார் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்க பிரசாந்த் கிஷோரை தேடி சென்றனர். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தற்போது ஜனஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அவர் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் தற்போது ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பதவி ஏற்ற ஒரு மணி நேரத்தில் பீகார் மாநிலத்தில் அமலில் இருக்கும் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். அதாவது மதுவிலக்கால் மாநிலத்திற்கு 20 ஆயிரம் கோடி வரை நஷ்ட ஈடு ஏற்பட்டுள்ளதாகவும் வெறும் கண்துடைப்பு நாடகத்துக்காக மதுவிலக்கை நிதிஷ் கட்காரி அமலில் வைத்துள்ளதாகவும் ஆனால் வீட்டிற்கு சென்று மதுபானங்கள் ஹோம் டெலிவரி செய்யப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் இந்த நிலையில் தற்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம் என்று அவர் கூறியது தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.