அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஏவுதளம் மீது பறக்கும் போது பலூனை சுட்டு வீழ்த்தினால் அது கடும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனை அடுத்து அந்த மர்ம பலூன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மர்ம பலூனின் இயக்கம் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் அமெரிக்காவுடன் இணைந்து கனடா நாடும் செயல்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல் கனடா நாட்டு வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விவகாரத்தினால் அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிலிங்கன் அவர்களின் சீன பயணமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆண்டனி பிலிங்கன் கூறியதாவது “அமெரிக்க வான்பரப்பில் சீனாவின் உணவு பலூன் பறந்திருப்பது எங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்ட விதி மீறல் என தெளிவாக தெரிகிறது” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் சீன வெளியுறவு விவகார அமைச்சகம் உளவு பலூன் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது “இந்த உளவு பலூன் எங்கள் நாட்டு குடிமக்கள் பயன்பாட்டிற்காக சீனாவில் இருந்து வந்த ஆகாயக கப்பல் வகையைச் சேர்ந்த விமானம் ஆகும்.

மேலும் இது ஆராய்ச்சி பணியில் வானிலை ஆய்வு தொடர்புடைய பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மாற்றத்தால் ஏற்பட்ட பலத்த காற்றாலும் குறைந்த சுய இயக்கத் தன்மையாலும் உளவு பலூன் தன் திசை மாறி திட்டமிட்ட இலக்கை விட்டு வேறு பகுதிக்கு சென்று விட்டது. மேலும் அமெரிக்க நாட்டின் வான் பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்கு எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இது எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம். இது குறித்து அமெரிக்க தரப்புடன் தொடர்பு கொண்டு எங்கள் தரப்பு நியாயத்தை விளக்குவோம்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் சீனா வெளியிட்ட விளக்கத்திற்கு பென்டகன் செய்து தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பேட் ரைடர் கூறியதாவது “அந்த பலூன் தற்போது கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியது. அமெரிக்க கண்டத்தின் மையத் பகுதிக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த பலூன் எங்கள் நாட்டு மக்களுக்கு ராணுவ அல்லது உடலியல் சார்ந்த அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவில்லை என்பது பற்றி இந்த நேரத்தில் நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். ஆனால் அந்த உளவு பலூனை தொடர்ந்து கண்காணித்து அதன் பின்னரே முடிவுகளை ஆய்வு செய்வோம். மேலும் சீன அரசினுடைய விளக்கம் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஒரு உளவு பலூன் தான். அதுவும் எங்களுக்கு தெரியும்” என்றார்.