தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 30-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் உரை மீது மானியக் கோரிக்கை விவாதங்களும், அனைத்து துறைகளுக்குமான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் MLA-களுக்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவ உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்ட இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசும் பரிசீலனை செய்தது. இதன் காரணமாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குரிய பென்ஷன் உயர்வு மற்றும் மருத்துவ உதவித்தொகை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த கூட்டத் தொடர் முடிவதற்குள்ளாகவே அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது.

இந்த நிலையில் இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தார். அதில் முன்னாள் எம்எல்ஏக்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் மருத்துவப்படி 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாக உயர்த்தபடும், குடும்ப ஓய்வூதியம் 15 ஆயிரமாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

சட்டப் பேரவையில் இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் படிக்கும்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்தவேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் முன்னாள் சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குத் இப்போது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் மாதம் முதல் உயர்த்தப்படும். அதேபோன்று குடும்ப ஓய்வூதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.12,500 என்பது ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். இப்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ.50 ஆயிரம் என்பது ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.