விழுப்புரத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து கோலியனூர் கூட்டு சாலை வரை கடந்த சில மாதங்கள் வரை மாணவர்களுக்கு மட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அரசு பேருந்து இயக்கப்பட்டது. அதன் பிறகு கோலியனூர் கூட்டு சாலை வரை பொதுமக்கள் சென்றுவரும் அரசு டவுன் பேருந்தாக மாற்றப்பட்டது. நேற்று காலை அரசு டவுன் பேருந்து ராகவன்பேட்டை பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததும் சில பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஏறி ரகளை செய்து பெண்களை கேலி, கிண்டல் செய்துள்ளனர்.

இதனை பார்த்த பேருந்து டிரைவரும், கண்டக்டரும் அந்த மாணவர்களை எச்சரித்தும் மாணவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் டிரைவர் பேருந்தை தாலுகா காவல் நிலையம் முன்பு நிறுத்தினார். இதனை பார்த்ததும் மாணவர்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து டிரைவரும், கண்டக்டரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.