சென்னையிலிருந்து நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அரசு விரைவு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வீரமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 40 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12:30 மணிக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள சென்னிநத்தம் குறுக்கு சாலை வெள்ளாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது வீரமணியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சென்றது. பேருந்து முன்பகுதி மட்டும் பாலத்தில் அந்தரத்தில் தொங்கியபடி நின்றதால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

முன்பக்கப் படிக்கட்டு அந்தரத்தில் தொங்கிய நிலையில் இருந்ததால் பயணிகளால் உடனே இறங்கி வர இயலவில்லை. அவர்களது சத்தம் கேட்டு பாலத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து பயணிகளை வெளியே விட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து மீட்பு வாகனம் மூலம் அந்தரத்தில் தொங்கிய பேருந்து மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.