சென்னை கொடுங்கையூர் அம்பிகா நகர் பகுதியில் மணிகண்டன் (29) என்பவர் எனது மனைவி கைக்குழந்தை மற்றும் வயதான மாமியார், மாமனார் உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் குத்தகைக்கு வீடு வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். இந்நிலையில் இணையதளத்தில் வரும் விளம்பரத்தை பார்த்து, அதிலிருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் கோபி மகாராஜா என்ற நபர் அவரிடம் பேசி முத்தமிழ் நகரிலுள்ள 13-வது தெருவில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். உடனே மணிகண்டனும் அந்த நபரின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.

அப்போது வீட்டிலிருந்த மனைவி அம்பிகா (43) என்பவரை மனைவி எனவும் பிரவீன் ராஜ் (19) என்பவரை மகன்  எனவும் அறிமுகம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் மணிகண்டனிடம் முத்தமிழ்நகர் 3-வது தெரு, காவேரி சாலையில் உள்ள தங்களது சொந்த வீட்டை 5 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விடுவதாக கூறியததற்கு, அவரும்  சம்மதம் தெரிவித்துள்ளார். உடனே மணிகண்டன், முன்பணமாக ரூ.2 லட்சத்தை பேசி, அதில் ரூ.1 லட்சம் காசோலையாகவும், மீதி ரூ.1 லட்சத்தை பணமாகவும் கடந்த நவம்பர் மாதம் கொடுத்துள்ளார்.

ஆனால் அவர்கள் கூறியபடி மணிகண்டனிடம் அந்த வீட்டை ஒப்படைக்கவில்லை. எனவே கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி மணிகண்டன் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று கேட்டுள்ளார். அப்போது கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி கோபி மகாராஜா மிரட்டி உள்ளார். இது குறித்து கொடுங்கையூர் போலீசில் மணிகண்டன் புகார் கொடுத்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான்  பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

அதாவது கோபி மகாராஜா என்பவருக்கு சொந்த வீடு இல்லை என்றும் அவருடன் அன்று வீட்டில் இருந்தவர்கள் அவரது மனைவி மற்றும் மகன் இல்லை என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் ஆன்லைனில் விளம்பரம் செய்து, தனது  நண்பரான குமாரின்  வீட்டை  வாடகைக்கு வாங்கி, அதை இவ்வாறு 7-க்கும் மேற்பட்டோருக்கு காண்பித்து ஏமாற்றி, 36 லட்ச ரூபாய்க்கும் மேலாக பண மோசடி செய்தது தெரியவந்தது. இதன்பிறகு போலீசார் அம்பிகா, பிரவீன் ராஜ், குமார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள கோபி மகாராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.