ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்தவர்  திருமூர்த்தி (62).  இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.  இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கொடுத்திருந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, வியாபார அடிப்படையில் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், அவர் என்னை அணுகி, ஏலச்சீட்டு நடத்த இருப்பதாகவும், அதற்கு நான் எனது நண்பர்கள், வியாபாரிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோரை ஏலச்சீட்டில் சேர்த்து விட வேண்டும் என்றும் கூறினார்.

அதன்படி, என்னுடைய நண்பர்கள், உறவினர் மற்றும் வியாபாரிகள் ஆகியோரிடம் இருந்து ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் சீட்டு என 5 வகையான சீட்டுகளில் மொத்தம்  20 பேர்களை சேர்த்து விட்டேன். மேலும் மேற்படி இந்த 5 வகை ஏல சீட்டுகளில்,  நானும் தலா ஒரு சீட்டு போட்டு வந்தேன்.

இதையடுத்து நாங்கள் தொடர்ந்து உரிய நேரத்தில் சீட்டுக்கான தொகையை அவரிடம் செலுத்தி வந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து ஏல சீட்டுகளும் முடிவடைந்துவிட்டது. மேலும் ஏல சீட்டு போட்ட எனக்கும், மற்றவர்களுக்கும் சேர்த்து, ரூ.2 கோடியே 20 லட்சம் பணம் கொடுக்க வேண்டும்.

இதற்கிடையில் கடந்த 2019-ம் ஆண்டு, 23 லட்ச ரூபாய் மட்டும், அவர் எங்களுக்கு கொடுத்தார். மீதி தொகை ரூ.1 கோடியே 97 லட்சத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த 2-ந்தேதி அவரிடம் பணம் கேட்க சென்றேன். அப்போது அவருடைய மனைவியும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஆகவே எங்களுக்கு பணம் தராமல் மோசடி செய்த நபர் மற்றும் அவருடைய மனைவி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து , எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பி தர வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.