SBI தன் வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர வைப்பு திட்டத்தினை வழங்குகிறது. SBI வழங்கக்கூடிய இந்த திட்டத்தில் நீங்கள் மொத்த பணத்தையும் முதலீடு செய்யவேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருமுறை மொத்த பணத்தையும் நீங்கள் முதலீடு செய்த பின் ஒவ்வொரு மாதமும் வட்டியை பெற்றுக்கொள்ளலாம். SBI-ன் வருடாந்திர வைப்புத் திட்டத்தில் வாடிக்கையாளருக்கு மாதந்தோறும் அசல் தொகையுடன் வட்டியும் வழங்கப்படுகிறது.

கணக்கில் முதலீடு செய்யப்பட்ட தொகையின் மீது ஒவ்வொரு காலாண்டிலும் வட்டியானது கணக்கீடு செய்யப்படுகிறது. SBI-ன் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலுள்ள தகவலின் படி, சேமிப்பு கணக்கை விட வருடாந்திர வைப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அதிக வட்டி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இத்திட்டத்தில் டெர்ம் முதலீட்டில் கிடைக்கக்கூடிய அதே வட்டியானது டெபாசிட்டுக்கும் கிடைக்கும். அதோடு இத்திட்டத்தில் அதிகபட்சமான வைப்புத்தொகைக்கு வரம்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் வைப்புத் தொகை மாதாந்திர வருடாந்திரத்தின் படி ரூ.1000 செலுத்தவேண்டும் மற்றும் வங்கி யுனிவர்சல் பாஸ்புக்கை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 36, 60, 84 (அ) 120 மாதங்களுக்கு முதலீடு செய்துக்கொள்ளலாம். இதில் நீங்கள் முதலீடு செய்த அடுத்த மாதத்தில் நிலுவை தேதியில் இருந்து வருடாந்திரம் செலுத்தப்படும். அத்தேதி அதே மாதத்தில் இல்லையெனில் அடுத்த மாத தேதியில் இருந்து வருடாந்திரம் பெறப்படும்.

இதனிடையே டிடிஎஸ் கழித்து இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு (அ) நடப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்ட பின் வருடாந்திர தொகை செலுத்தப்படும். வேண்டுமானால் ஆண்டுத் தொகையின் இருப்பு தொகையில் 75 சதவீதம் வரை ஓவர் டிராஃப்ட் செய்யலாம். அருகிலுள்ள SBI-ன் கிளைகளுக்கு சென்று வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்துக்கொள்ளலாம். இக்கணக்கை வங்கியின் ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு மாற்றிக்கொள்ளும் விருப்பமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர் இறந்து விட்டால் அவரது கணக்கு முன்கூட்டியே மூடப்படும்.