திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி,  சகோதரர்களே… சகோதரிகளே நம்முடைய அன்பு தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…  உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம்,  தலைவர் கலைஞர் அவர்களிடமிருந்து நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் வரை தொடர்ந்து,  தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை. நீட் எங்களுடைய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கக்கூடிய  ஒன்றாக இருக்கின்றது, அதை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

அந்தப் போராட்டத்தின் ஒரு நீச்சியாக… இளைஞர் அணியின் சார்பிலே உதயநிதி அவர்களால் உண்ணாவிரத போராட்டம் என்பது மாணவர் அணியோடு, மருத்துவர் அணியோடு இணைந்து தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டம் ஒரு மாணவர்களின் போராட்டமாக…  மக்கள் எழுச்சி போராட்டமாக மாற வேண்டும் என்று தான் நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிற கருத்து. இந்த நீட் தேர்வுகள் நாம் வேண்டாம் என்று சொல்லுவதற்கு காரணம்…  கொஞ்சம் நாம் சரித்திரத்தின் பக்கங்களை திருப்பி பார்க்க வேண்டும்.

ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நீங்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் ? சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்கலாம்.  சமஸ்கிருதம் தெரியலன்னா… மருத்துவம் படிக்க முடியாது,  கேட்கலாம் எதுக்கு சமஸ்கிருதத்துக்கும், மருத்துவத்துக்கும் சமஸ்கிருதம்.  லத்தீன் படி, கீரீக் படி என்றால் ? அதுலயாவது பெயர் இருக்கும். அதை புரிஞ்சிக்கிறதுக்கு வசதியா இருக்கும், நாம் புரிந்து கொள்ள முடியும்.  ஆனால் சமஸ்கிருதம் படித்தால்  தான் மருத்துவக் கல்லூரியில் இடம் என்று இருந்த நிலையை மாற்றியது திராவிட இயக்க ஆட்சி.

அவங்க எதுக்காக சமஸ்கிருதம் படித்தால் மட்டும் தான் உங்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் என்று வைத்திருந்தார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம்ம வீட்ல இருக்கக்கூடிய பிள்ளைகள் மாணவ – மாணவிகள் சமஸ்கிருதம் படிக்கக்கூடிய வாய்ப்பு இல்லை. சமீபத்தில் கூட ஒரு மத்திய அமைச்சர் என்னை சமஸ்கிருதம் படிக்க விடல…  சமஸ்கிருதம் படிச்சிட்டே சொன்னாங்க. அந்த ஏக்கம் அவர்களுக்கு தான் இருக்கும்.  சமஸ்கிருதம் படிக்கணும்,  தெரிந்து கொள்ள வேண்டும்.

நமக்கு படிக்கணும்னு சிந்தனையும் இருக்காது, சொல்லித் தருவதற்கான வாய்ப்பு கிடையாது. அப்போதே இந்த சட்டத்தை வைத்திருந்த காரணம் சமஸ்கிருதம் படிக்கக்கூடிய ஒரு வகுப்பினர்….  முன்னேறியவர்களாக தன்னை கருதிக் கொள்ளக்கூடிய ஒரு ஜாதியை சார்ந்தவர்கள் மட்டுமே மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் இந்த சட்டத்தை வைத்திருந்தார்கள். இப்போது மறுபடியும் இந்த நுழைவு தேர்வு ”நீட் தேர்வு” என்ற தேர்வை கொண்டு வந்து, அதை யாருக்கெல்லாம் இன்றைக்கு மருத்துவக் கல்லூரிக்கு வருவதற்கான வாய்ப்பு தரப்பட்டிருக்கிறதோ…

தலைவர் கலைஞர் அவர்கள் சாதாரண சாமானிய குடும்பத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட – ஒதுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்த பிள்ளைகள் எல்லாம் படிக்கணும் என்பதற்காக தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தார்கள். அதனால் எல்லோருக்கும் படிப்பதற்கான வாய்ப்பு…. சாதாரண பிள்ளைகள்,  வசதி இல்லை என்று சொல்லக்கூடிய வீட்டு பிள்ளைகள்,  எல்லாம் மருத்துவர்களாக வலம்  வந்து கொண்டிருந்தார்கள்.

இது நிறைய பேருடைய கண்ணை உறுத்தக்கூடிய ஒன்றாக மாறியது. என் வீட்டுப் பிள்ளையும், நானும், நீயும்,  ஒண்ணா ஒரே இடத்தில பணியாற்றுகிறோம். எனக்கு கிடைக்கக்கூடிய எல்லா மரியாதையும் உனக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைத்தார்களோ..  என்னவோ நீட் அப்படிங்கற ஒரு தேர்வை கொண்டு வந்து,  இந்தியாவிலேயே அதிகமாக அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கக்கூடிய ஒரு மாநிலத்திலும் அதைக் கொண்டு வந்து, நம்முடைய பிள்ளைகள், நம்முடைய வரிப்பணத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய  மக்களுடைய வரிப்பணத்திலே கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளில்…  தமிழ் மாணவர்களுக்கு…. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு இடம் இல்லை என்று சொல்லக்கூடிய நிலையை அவர்கள் இன்று உருவாக்கி இருக்கிறார்கள் என பேசினார்.