
கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் சசிஷா என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு பிரசவ வலி காரணமாக அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 வாரமே ஆன நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் எடை 350 கிராம் இருந்தது. குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால் அந்த மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் ரோஜோ ஜாய் மருத்துவக் குழு அந்த குழந்தையை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து கவனித்து வந்தனர். தொடர்ந்து 100 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்து அந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
அந்தக் குழந்தை தற்போது நல்ல நலமுடன் தேறி வருவதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது. அந்த குழந்தைக்கு நோவா என பெயர் வைத்துள்ளனர். இது குறித்து டாக்டர் ரோஜோ ஜாய் கூறியதாவது, குழந்தை தாயின் வயிற்றில் பொதுவாக 33 முதல் 36 வாரங்கள் வளர்ச்சி அடையும். இந்த நிலையில் நோவா முழு வளர்ச்சி அடைவதற்கு முன்பே 23 வாரங்களில் பிறந்துள்ளது. தாய்க்கு தொற்று நோய் பிரசவத்தின் போது இருந்துள்ளது. இதனை குழந்தைக்கு பரவாமல் தடுக்கவும், குழந்தையின் எடை வெறும் 350 கிராம் என்பதால் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
இவை அனைத்தையும் கருதி சிகிச்சை ஆரம்பித்தோம். குழந்தையின் உடல் உறுப்புகள் முழு வளர்ச்சி பெறாததால் குழந்தைக்கு உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஒரு மாதத்திற்கு பராமரிக்கப்பட்டது உடல் எடையை அதிகரிக்கும் சிகிச்சையும் வழங்கப்பட்டது. தற்போது நோவா முழுமையாக வளர்ச்சி அடைந்து உள்ளார். செயற்கை சுவாசம் எடுக்கப்பட்டு சுயமாக சுவாசிக்க பழகி வருகிறது. தற்போது நோவாவின் எடை 1.850 கிராம் ஆகும். தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.