மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த ஒரு பெண்ணின் கொலை வழக்கை, வெறும் ஒரு துண்டு ‘ஆம்லெட்’ மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் போலீசார் அதிரடியாக முறியடித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 29-ம் தேதி காட்டில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முகம் அடையாளம் தெரியாத அளவுக்குக் கல்லால் சிதைக்கப்பட்டிருந்ததால், போலீசார் முதற்கட்டமாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் உருவத்தை வரைபடமாக உருவாக்கினர்.

கொலை நடந்த இடத்தைச் சோதனையிட்டபோது, அங்கிருந்த ஒரு சிறிய ‘ஆம்லெட்’ துண்டு போலீசாருக்குப் பெரிய துப்பு கொடுத்தது. அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள தள்ளுவண்டி கடைகளில் விசாரித்தபோது, ஒரு நபர் பெண்ணுடன் வந்து ஆம்லெட் சாப்பிட்டதும், அதற்கு ‘ஆன்லைன்’ மூலம் பணம் செலுத்தியதும் தெரியவந்தது.

அந்த டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளை வைத்து கொலையாளி சச்சின் சென் என்பவனைப் போலீசார் வளைத்துப் பிடித்தனர்.

விசாரணையில், கணவரைப் பிரிந்து தன்னுடன் வசித்து வந்த அந்தப் பெண், வேறு சிலருடனும் பழகியது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக அவன் ஒப்புக்கொண்டான். ஒரு துண்டு ஆம்லெட் கொலையாளியைக் காட்டிக்கொடுத்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.