திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அம்பேத்கர் நகரில் ஆட்டோ டிரைவரான மந்திரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர் ரகுவரன் சிதம்பரபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் என்ஜினியராக இருக்கிறார். இந்நிலையில் மந்தரமூர்த்திக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்காக இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலியில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை ரகுவரன் ஓட்டி சென்றார்.

இந்நிலையில் நாங்குநேரியில் இருந்து நெல்லை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மந்திரமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரகுவரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரகுவரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.