திமுக கட்சியில் வருகின்ற ஜூன் மாதத்துக்குள் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதன் காரணமாக 234 தொகுதிகளிலும் திமுக சார்பாக புதிய மாவட்ட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது ஒவ்வொரு தொகுதியிலும் எந்த அளவுக்கு உறுப்பினர்களின் சேர்க்கை இருக்கிறது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார். அதன் பிறகு மாவட்ட பார்வையாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதன் அடிப்படையில் உங்கள் பணிகள் இருப்பதோடு, புதிய உறுப்பினர்களை சேர்க்கும்போது அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து எடுத்து சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். நீங்கள் தொகுதி பார்வையாளர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பதால் தொகுதியின் பிரச்சினை குறித்தும் நீங்கள் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரலாம். உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என்று கூறினார். மேலும் ஜூன் மாதம் கலைஞர் பிறந்தநாளுக்கு முன்பாக ஒரு கோடி புதிய உறுப்பினர்களை திமுகவில் இணைக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.