
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் உள்ள கிராண்டு வியூ மருத்துவமனையில், பாமெலா மேன் என்ற பெண் சிசேரியன் முறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் குழந்தை பிறந்தவுடன், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், குழந்தையின் எடை சாதாரண குழந்தைகளுக்குப் பிடித்த அளவைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக இருந்தது. குழந்தை பிறந்தபோது 13 பவுண்டு 4 அவுன்ஸ் (சுமார் 6 கிலோ) எடை கொண்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான குழந்தையின் சராசரி எடையை விட மிகவும் அதிகமாகும்.
பாமெலா கூறுகையில், “குழந்தையை வெளியே எடுத்தவுடன், அருகில் இருந்த செவிலியர்கள் ‘ஓ கடவுளே!’ என்று கூச்சலிட்டனர். நான் உடனே பயந்து ‘என்ன நடந்தது?’ என்று கேட்டேன்,” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக, மருத்துவர்கள் குழந்தையின் எடை 8 பவுண்டாக இருக்கலாம் என கணித்திருந்தனர், ஆனால் பிறந்தபோது எதிர்பார்த்ததை விட மிகவும் அதிக எடையுடன் இருந்ததால், மருத்துவமனையில் உள்ள அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
குழந்தை பிறந்ததிலிருந்து, மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அவரைக் காண மீண்டும் மீண்டும் வந்ததாக பாமெலா நகைச்சுவையாக தெரிவித்தார். “அவர் பிறந்த 3 நாட்கள் தான் ஆகுது, ஆனால் ஏற்கனவே மிகப்பெரிய பிரபலமாகிவிட்டார்!” என்றும் கூறினார். கூடுதலாக, குழந்தை 16 நாட்கள் முன்பாகவே பிறந்திருந்தாலும், 6 மாத குழந்தைகளுக்கே பொருந்தும் உடைகளை அணிந்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாரிஸ் ஹெல்லோ குழந்தையின் எடை மிக அதிகமாக இருந்தாலும், கின்னஸ் சாதனை படைக்கவில்லை. கின்னஸ் உலக சாதனையின் படி, இதுவரை பிறந்த மிகப்பெரிய குழந்தை 1955ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த 10 கிலோ எடையுடைய குழந்தை ஆகும். இருப்பினும், பாரிஸ் ஹெல்லோ, சமீபத்தில் அமெரிக்காவில் பிறந்த மிகப்பெரிய குழந்தைகளில் ஒருவராகக் கருதப்படுகிறது. இதனால், இந்த குழந்தை பற்றிய செய்தி அமெரிக்கா முழுவதும் பரவி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.