
உலகம் முழுவதும் உள்ள கொடிய வகை நோய்களில் எச்ஐவி வைரஸும் ஒன்று. இது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் மிகவும் கொடிய வைரஸ் ஆகும். இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக சமீபகாலமாக புகார்கள் எழுந்தது. இதனால் அம்மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சோதனை நடத்த முடிவு செய்தது. அதன்படி 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 828 மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 527 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 47 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர்.
இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் சென்று மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்களை மீண்டும் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதாவது ஒரே போதை ஊசியை திரும்பத் திரும்ப பலர் பயன்படுத்தியதால்தான் இந்த நோய் தொற்று பரவியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பல மாணவர்களின் பெற்றோர் அரசு பணியில் இருப்பதால் தங்கள் பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை. இதனால்தான் போதைப்பொருள் புழக்கம் என்பது அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார்கள்.