
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ரோஹித் ஷர்மா, அண்மைய காலங்களில் தனது உடல் நிலையும், ஆட்டத் திறனும் குறைந்து வருவதாக விமர்சிக்கப்பட்டிருந்த நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 76 ரன்கள் அடித்து இந்தியா வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார். ஆனால், இதற்கு முன்பே, அவரது உடல் நிலையை கையாளும் திறன் பற்றிய ஒரு சம்பவம் கடந் 2022-ம் ஆண்டு நடந்துள்ளது. இது பற்றி ஆஸ்திரேலிய முஸ்குலோஸ்கெலிட்டல் (மூட்டு மற்றும் தசை) மருத்துவர் ஜாரெட் பவெல், அண்மையில் இந்த சம்பவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ரோஹித்தின் உடல் கட்டுப்பாடு மிகவும் வலுவானது என்றும், அவர் தனது முழங்கையை தானாகவே திருத்தியதைப் பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
அதாவது கடந்த 2022-ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் போட்டியின் போது, ரோஹித் ஷர்மாவின் இடது முழங்கையில் காயம் ஏற்பட்டது. ஜடேஜாவின் பந்துவீச்சில், லியம் லிவிங்ஸ்டோனின் ஒரு ஷாட்டை காப்பாற்ற முயன்றபோது, அவர் குதித்து பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால், அந்த தருணத்தில் அவரது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அடுத்த நொடியில், தன் முழங்கையை சுழற்றி, தானாகவே திருத்திக்கொண்ட ரோஹித், தன்னை சுற்றியுள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அப்போது “ஓச்!” என்று ஆங்கில கமெண்டேட்டராக இருந்த மைக்கேல் அதர்டன் குரலெழுப்பினார். “இவர் செய்தது என்ன? முழங்கை நகர்ந்ததை திருப்பிப் போட்டுவிட்டாரா?” என்று கேட்டார். நாசர் ஹுசைன் எனும் மற்றொரு முன்னாள் கேப்டன், “எயோயின் மோர்கன் இதை அவர் அடிக்கடி செய்கிறார் என சொல்கிறார்” என்று தெரிவித்தார்.
மருத்துவ நிபுணர் ஜாரெட் பவெல், ரோஹித்தின் உடல் கட்டுப்பாட்டிற்கும், தன்னம்பிக்கைக்கும் பாராட்டு தெரிவித்தார். “உடல் மூட்டு காயம் ஏற்பட்டால், அதை மருத்துவ நிபுணர்களே திருத்த வேண்டும் என்பது வழக்கம். ஆனால், ரோஹித்தின் செயல் மிக கடினமான ஒன்றாக இருந்தாலும், அவரது உடல் கட்டுப்பாடு ஆச்சரியமானது” என்று குறிப்பிட்டார். இந்நிலையில் 38-வது வயதினை நெருங்கும் ரோஹித், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வரும் IPL 2025 சீசனில் விளையாடவுள்ளார். இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கையுடன் எதையும் சமாளிக்கும் அவரது இந்த தன்மையே, அவரை தொடர்ந்து இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரராக வைத்திருக்கிறது என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர்.
View this post on Instagram