திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டரின் கார் நிற்கும் இடத்திற்கு அருகே மூன்று பெண்கள் மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் தீக்குளிக்க முயன்றவர்கள் முசிறியைச் சேர்ந்த பாப்பாத்தி(65), அவரது மகள் மாலதி(40), பேத்தி ஹரி பிரியா(12) என்பது தெரியவந்தது.

இது குறித்து பாப்பாத்தி கூறியதாவது, எங்களுக்கு சொந்தமான வீட்டை ஒருவர் ஆக்கிரமித்தார். இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலகங்களில் பலமுறை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றோம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.