மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரைப் பருகியதால் 5 மாதப் பச்சிளம் குழந்தை உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தூய்மையான நகரம் எனப் புகழப்படும் இந்தூரின் பகீரத்புரா பகுதியில், குடிநீர்க் குழாயில் கழிவுநீர் கலந்ததே இந்தத் துயரத்திற்குப் பிரதான காரணமாகக் கூறப்படுகிறது.

இதில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை அவ்யான் சாஹு, அவனது பெற்றோர்களுக்கு 10 ஆண்டுகள் நீண்ட காத்திருப்பு மற்றும் வேண்டுதல்களுக்குப் பிறகு பிறந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்ப்பால் பற்றாக்குறை காரணமாக, மருத்துவர்களின் அறிவுரைப்படி புட்டிப்பாலுடன் குடிநீரைக் கலந்து கொடுத்ததே அந்தச் பிஞ்சுயிரின் மரணத்திற்கு வினையாக முடிந்தது அக்குடும்பத்தினரை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் குடிநீர் மாசுபாட்டினால் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர்க் குழாய்க்குக் கசிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே பொதுக் கழிப்பறை ஒன்று கட்டப்பட்டிருந்ததால், மனிதக் கழிவுகள் குடிநீருடன் கலந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து, மெத்தனமாகச் செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது முதல்வர் மோகன் யாதவ் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்ட போதிலும், பணத்தால் தங்கள் குழந்தையை மீட்க முடியாது எனக் கூறி அவ்யானின் பெற்றோர் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஒரு வளமான குடும்பத்தின் 10 ஆண்டுகாலக் கனவு சிதைந்து போனது ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.