பெற்ற மகளையே எமன் போல மாறிய தந்தை ஒருவரின் கொடூரச் செயல் அலிகார் மக்களை உலுக்கியுள்ளது. சிவில் லைன் பகுதியில் வசிக்கும் முக்ரிம் என்ற நபர், மது மற்றும் போதைக்கு அடிமையானவர். இவருக்கும் இவரது மனைவி ராணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று இரவு முக்ரிம் போதை வஸ்துகளை வீட்டுக்கு வாங்கி வந்துள்ளார். இதைக் கண்டித்த மனைவி ராணியுடன் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற முக்ரிம், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தனது 15 நாள் பெண் குழந்தையைத் தூக்கித் தரையில் ஓங்கிப் போட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த குழந்தை, சிகிச்சை இன்றி பரிதாபமாக உயிரிழந்தது. கொடூரம் என்னவென்றால், குழந்தையைக் கொன்றுவிட்டு அதே போதை மயக்கத்தில் பிணத்தின் அருகிலேயே அந்தத் தந்தை குறட்டை விட்டுத் தூங்கியுள்ளார்.