உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ஏடிஜே நீதிமன்றம், இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு, 22 வயதுடைய மனோஜ் குமார் சிங் மற்றும் அவரது ஓட்டுநர் ரவி ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரையும் ராஜா மற்றும் அவரது மைத்துனர் பச்ராஜ் கோல் சேர்ந்து கடத்தி, கொலை செய்ததோடு, அவர்களின் தலையை வெட்டி, மூளை பாகங்களை சூப்பாக வேகவைத்து குடித்திருந்தனர் என்பது வழக்கின் மையப்புள்ளி.

இந்த இரட்டைக் கொலை வழக்கில், ராஜா கோலந்தர் மீது 2001ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சட்ட சிக்கல்கள் காரணமாக விசாரணை 2013இல் தான் தொடங்கியது. வழக்கின் விசாரணை முடிவாக, லக்னோ நீதிபதி ரோஹித் சிங், ராஜா கோலந்தருக்கும், பச்ராஜ் கோலுக்கும் ஆயுள் தண்டனை விதித்தார்.

மனோஜ் மற்றும் ரவி, ரயிலில் பயணித்து ரேவா சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டு, பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சங்கர்கர் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் சிதைந்த உடல்கள் சில நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டன.

இதே ராஜா கோலந்தர் மீது, பத்திரிகையாளர் தீரேந்திர சிங் கொலை வழக்கிலும் 2012ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவரது பண்ணை வீட்டில் இருந்து 14 மனித மண்டை ஓடுகள் மீட்கப்பட்டன. ஒவ்வொரு தலைக்கும் குறிப்பிட்டு பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.

மனித தலைகளை வெட்டி, மூளை பாகங்களை கொதிக்க வைத்து சாப்பிடும் இவரின் கொடூர செயல்கள், நரமாமிச உண்பவர் மற்றும் தொடர் கொலைகாரர் என்ற திகிலூட்டும் அந்தஸ்தை உறுதிப்படுத்தியிருந்தன. அரசியலிலும் ஈடுபாட்டுடன் இருந்த ராஜா, மக்கள் மத்தியில் “ராஜா” என்ற பெயரில் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பிற்கு வந்தாலும், ராஜாவின் கொடூரமான செயல்கள் இந்திய சட்டத்தின் கடுமையான விதியின் கீழ் இன்று வெளிப்படையாக அழிக்கப்பட்டுள்ளன.