தெலங்கானா மாநிலத்தில், நாகர்கர்னூல் மாவட்டத்தில், ஒரு ஆட்டோ ஓட்டுநர் 23 பள்ளி மாணவர்களை ஆபத்தான முறையில் ஆட்டோவில் ஏற்றிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலைகள் மற்றும் தற்கொலைகளை விட சாலை விபத்துகளாலேயே அதிக மரணங்கள் தெலங்கானாவில் நிகழ்வதாக மாநில டிஜிபி தெரிவித்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் பொதுமக்களின் அலட்சியத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

வைரலான அந்த வீடியோவில், ஆட்டோவுக்குள் பள்ளிப் பைகள், உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் குழந்தைகள் எறும்புக் கூண்டைப் போல நெரிசலான நிலையில் பயணிப்பது தெளிவாகத் தெரிகிறது.

போலீசார் அந்த ஆட்டோவை நிறுத்தி, உள்ளே இருந்த குழந்தைகளை ஒவ்வொருவராக எண்ணியபோது, மொத்தம் 23 மாணவர்கள் இருந்தனர்.

“>

உடனடியாக ஆட்டோவைப் பறிமுதல் செய்த போலீசார், மாணவர்களை வேறு இரண்டு வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். வரம்பை மீறிப் பயணிகளை ஏற்றுவது சாலைப் பாதுகாப்பு விதிமீறல் என்று எச்சரித்த போலீசார், இதுபோன்ற பொறுப்பற்ற போக்குவரத்து முறைகளாலேயே சாலை விபத்துகள் ஏற்படுவதாகக் கூறினர்.

இந்தச் சம்பவம் குறித்து ஆட்டோ ஓட்டுநர் மீதுக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.