டெல்லியில் உள்ள சாகேத் பகுதிக்கு அருகில், ஒரு ஜோடி ஓடும் காரின் கூரை மீது ஏறி அபாயகரமான சாகசங்களைச் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தைத் தூண்டியுள்ளது.
அந்த வீடியோவில், முதலில் ஒரு இளைஞன் ஓடும் காரின் கதவில் தொங்கிக் கொண்டே வந்து, பின்னர் அதன் கூரை மீது ஏறி உள்ளார். அப்போது, கார் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தபோதே, காரில் இருந்த பெண்ணை அவன் முத்தமிட்ட காட்சி பதிவாகியுள்ளது.
View this post on Instagram
இந்தக் கார் சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, டெல்லி காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. விபரீதச் செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்த போலீசார், அவர்கள் மீது போக்குவரத்து விதிமீறல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் தங்கள் நடவடிக்கை குறித்த தகவலை, பிரபல “தப்பா” (Dhappa) என்ற ட்ரெண்டைப் பயன்படுத்தி, ஒரு நகைச்சுவையான சமூக ஊடகப் பதிவாக வெளியிட்டனர்.
விதிமீறியவர்கள் மீது சட்டபூர்வமான வழிமுறைகளுக்குக் கீழ்ப்படியாமை (179 MVA) மற்றும் அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் (184 MVA) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற அபாயகரமான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு போலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
