இணையத்தில் தங்களை வாடிக்கையாளர் சேவை வழங்குவோராக காண்பித்து பொதுமக்களை ஏமாற்றி  வரும் மோசடி சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

  1. இணையத்தில் காணப்படும் வாடிக்கையாளர் சேவை எண்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் பயன்படுத்தக் கூடாது என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மக்களை ஏமாற்ற சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் போலி வாடிக்கையாளர் சேவை தொடர்பு  எண்களின் மூலம் பல மோசடி சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில்,  இந்த எச்சரிக்கையானது வழங்கப்பட்டுள்ளது.
  1. இந்த போலி வாடிக்கையாளர் சேவை எண்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்பட்ட இரண்டு குறிப்பிட்ட நிகழ்வுகளை பார்க்கலாம்.   திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பெண் தான் வாங்கிய பொருளில் கண்ட தயாரிப்பு பிரச்சினைக்காக வாடிக்க்கையாளர் உதவியை நாடிய போது  கணிசமான தொகையை இழந்தார். மற்றொரு வழக்கில், சென்னையில் உள்ள 54 வயது நபரும் இதே போன்ற மோசடியில் ஈடுபட்டு , பணத்தை இழக்க காவல்துறை அதிகாரிகள் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 
  1. சைபர் கிரைம் குற்றவாளிகள் பெரும்பாலும் வெவ்வேறு இடங்களில் இருந்து செயல்பட்டு , போலி வாடிக்கையாளர் சேவை மையங்களைப் பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேற்கொண்ட தொடர்விசாரணையில், ஜார்க்கண்டில் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார், பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் போலி வாடிக்கையாளர் சேவை மையத்தை நிறுவி நடத்தி வந்தது  கண்டுபிடிக்கப்பட்டது.
  1. வாங்கிய பொருள்களுக்கான ரசீதுகள் அல்லது அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வழங்கப்பட்ட வாடிக்கையாளர் உதவி மைய எண்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும் என  சைபர் கிரைம் குழு & காவல்துறையின் ஆலோசனையாக உள்ளது. சைபர் கிரைம்களுக்குப் பலியாவதைத் தவிர்க்க, பொதுமக்கள் மேற்கண்ட ஆலோசனையை நினைவில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.