நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூறினர். அதன் விவரம்,

ஜார்ஜ் என்பவர் கூறியுள்ளதாவது, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பலருக்கு அரசு இலவச பட்டா வழங்கி, அந்த இடத்தில் அவர்கள் வீடுகளை கட்டியுள்ளனர். ஆனால் வரி நிர்ணயிக்கப்படாத நிலையில், அவர்களால் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பெற முடியாத சூழலில், உடனடியாக வரியை நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறினார். இதனையடுத்து மழைக்காலம் தொடங்கும் முன் கழிவு நீர் கால்வாய்களை தூர் வார வேண்டும். சுகாதாரம் இல்லாமல் உள்ள கழிப்பிடங்களை உடனடியாக சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இஸ்மாயில் என்பவர் கூறினார்.

இதன் பிறகு செல்வராஜ் கூறியதாவது, நொண்டிமேடு பகுதியில் மாணவர்கள் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும். மேலும் மேட்டுச்சேரி பகுதியில் வன விலங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளதால், தெரு விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும் என குமார் தெரிவித்தார்.
இறுதியாக துணைத்தலைவரான ரவிக்குமார், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் எத்தனை நாட்களுக்குள் வழங்கப்படும் என்பது தொடர்பான தகவல் பலகையை வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.