சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அதன்படி சென்னையில் உள்கடமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, வடசென்னை கடற்கரைகளை வண்ணமயமான வசதிகளுடன் புதுப்பித்தல், பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதன் பிறகு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய பூங்கா ஒன்று அமைக்கப்பட இருக்கிறது.

இந்த பூங்கா சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் அமையும் நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதை பயன்படுத்தலாம். இப்பகுதியில் புதிய மருத்துவமனை சிகிச்சை மையம் ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது. இதேபோன்று 24 மணி நேர ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை, அங்காடி நிர்வாகக் குழுவிற்கான தனி வலைதளம் போன்றவைகளும் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் சுமார் 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த திட்டத்திற்கு இந்த வருடமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.