ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூபாய் 545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான மேல் நோக்கி திறந்து மூடும் வகையில் தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தில் 3 சரக்கு ரயில்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மேலும் தூக்கு பாலத்தை திறந்து மூடி பல்வேறு கட்ட சோதனைகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் பாம்பன் புதிய பாலத்தில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இணைக்கப்பட்டது. ரயில் என்ஜின் உடன் 3 பெட்டிகளும் இணைக்கப்பட்டிருந்தன.
புதிய பாலத்தை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம் சௌத்ரி வருகின்ற 13-ஆம் தேதி பெங்களூருவிலிருந்து சிறப்பு ரயில் மூலம் மண்டபம் வருகின்றார். பின்னர் அவர் 2 நாட்கள் தங்கி புதிய ரயில் பாலத்தை முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதன் பின் புதிய பாலத்தின் திறப்பு விழா தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.