கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் ரயிலில் உள்ள சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீப்பற்றி எறிய தொடங்கியுள்ளது.
இந்த விபத்தில் ரயிலின் முன்பக்கத்தில் இருந்து சில பெட்டிகள் முற்றிலுமாக உருகுலைந்துள்ளது. அதில் சில பெட்டிகள் தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. மேலும் இரண்டு ரயில்களும் மோதிய போது நில நடுக்கம் ஏற்பட்டது போல் பயங்கர அதிர்வு வந்ததால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு ஓடிச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்களும் மீட்பு குழுவினரும் போலீசாரம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும் விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதால் மீட்பு குழுவினர் பிளாஷ் லைட்டுகளை பயன்படுத்தி மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கோர விபத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது “ஒரே தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில் இரண்டு ரயில்கள் எப்படி வந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றோம்” என்று கூறியுள்ளனர்.