உலக கோப்பையின் 2வது போட்டியில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பையில் இன்று இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று 2 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பக்கர் ஜமான் 12 ரன்களும், இமாம் உல் ஹக் 15 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து வந்த பாபர் அசாம் 5 ரன்களில் வெளியேறிய போதிலும், முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல் இருவரும் ஜோடி சேர்ந்து அரை சதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதையடுத்து சவுத் ஷகீல் 52 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

தொடர்ந்து முகமது ரிஸ்வான் 75 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின் வந்த இப்திகார் அகமது 9 ரன்களில் வெளியேறினார். பாகிஸ்தான் அணி 32 ஓவரில் 6 விக்கெட் இழந்து 188 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் இருவரும் கைகோர்த்து சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் பின் ஷதாப் கான் 32 ரன்களிலும், முகமது நவாஸ் 39 ரன்களிலும் அவுட் ஆகினர். மேலும் ஹசன் அலி டக் அவுட் மற்றும் ஹாரிஸ் ரவூப் 16 ரன்களில் அவுட் ஆக பாகிஸ்தான் அணி 49 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷாஹின் அப்ரிடி 13 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளும், அக்கர்மேன் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்த விக்ரம் சிங் மற்றும் மேக்ஸ் ஓ டவுட் இருவரும் களமிறங்கினர். இதில் ஓ அவுட் 5 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து வந்த கோலின் அக்கர்மேன் 17  ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் விக்ரம் சிங் மற்றும் பாஸ் டி லீடே இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினர்.  இதையடுத்து அரைசதமடித்த விக்ரம் 52 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஹாரிஸ் ரவூப்பின் 27வது ஓவரில் தேஜா நிடமானுரு 5, எட்வர்ட்ஸ் டக் அவுட் ஆகி வெளியேறினர். பின் சாகிப் சுல்பிகர் 10 ரன்னில் அவுட் ஆனதை தொடர்ந்து, மறுமுனையில் தனியாக சிறப்பாக ஆடி வந்த பாஸ் டி லீடேவும் (68 பந்துகளில் 67 ரன்கள்) நவாஸின் 34வது ஓவரில்  ஆட்டமிழந்தார். இதனால் நெதர்லாந்தின் வெற்றி நம்பிக்கை தகர்ந்தது.

இதையடுத்து  வான் டெர் மெர்வே 4, ஆர்யன் தத் 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். கடைசி விக்கெட்டாக லோகன் வான் பீக் மற்றும் பால் வான் மீகெரென் களத்தில் நின்றனர். பின் வான் மீகெரென் 1 ரன்னில் அவுட் ஆக, நெதர்லாந்து அணி 40.5 ஓவரில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. வான் பீக் 28 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் லீடே சிறப்பாக ஆடினார். இருப்பினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ரவூப்  3விக்கெட்டுகளும், ஹசன் அலி  2 விக்கெட்டுகளும், ஷாஹின் அப்ரிடி, இப்திகார் அகமது, முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.