செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சீவாடி ஊராட்சியில் நிகமத்துல்லா என்பவர் நிலம் வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நிகமத்துல்லா அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய சீவாடி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதனை அணுகிய போது அவர் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து நிகமத்துல்லா சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நிகமத்துல்லா அரங்கநாதரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அரங்கநாதனை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.