சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு விநாயகபுரம் ஒன்றாவது தெருவில் ரகுராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எவர்சில்வர் பட்டறையில் பாலிஷ் போடும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரகுராமன் தனியார் வங்கியில் 2 லட்ச ரூபாய் கடன் வாங்கினார். அதற்கு 6000 ரூபாய் தவணை தொகை செலுத்தி வந்தார்.

கடந்த சில மாதங்களாக சரியாக வேலை இல்லாததால் ரகுராமன் தவணைத் தொகையை கட்டவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் இரண்டு பேர் பணத்தை செலுத்த கூறி அவரை கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ரகுராமன் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வங்கி ஊழியர்கள் பணம் கேட்டு மிரட்டி நெருக்கடி கொடுக்கின்றனர்.

நான் தூக்கு போட்டு தற்கொலை செய்யப் போகிறேன். குழந்தைகளை நீ நன்றாக பார்த்துக் கொள் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சாமுண்டீஸ்வரி பக்கத்து வீட்டில் இருப்பவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது ரகுராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகுராமனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த வங்கி ஒப்பந்த ஊழியர்களை ரகுராமின் உறவினர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் ரெடியாக உள்ளது வந்து வாங்கி செல்லுங்கள் என கூறினர். அதனை நம்பி வந்த ஊழியர்களை உறவினர்கள் மடக்கி பிடித்து காசிமேடு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வங்கி ஊழியர்கள் இரண்டு பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.