சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது..

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அதிக கோப்பைகளை வென்ற மும்பையின் சாதனையை சமன் செய்துள்ளது. இதுவரை நடைபெற்ற 16 சீசன்களில் இரு அணிகளும் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன.

இந்த வெற்றியை தொடர்ந்து சென்னை அணியின் கேப்டன் தோனி முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியானது. 41 வயதான தோனி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் முழங்கால் காயத்துடன் அனைத்து போட்டிகளிலும் விளையாடினார்.

ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் இது குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், கேப்டன் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்படுவது உண்மைதான். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, சிஎஸ்கே வீரர்களை அதிகமாக ரன் ஓட வைக்க வேண்டாம் என்றும் தோனி வெளிப்படையாக கேட்டுக் கொண்டார்.

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கடைசி லீக் போட்டி முடிந்ததும், சென்னை வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பரிசுகளை வழங்கினர். கேப்டன் தோனியின் முழங்காலில் கட்டப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே எம்.எஸ். தோனி மும்பையின் புகழ்பெற்ற கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் என்றும், அவரது முழங்கால் காயத்தின் அளவை சரிபார்க்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் தோனிக்கு முழங்காலில் தற்போது அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ளது. முன்னதாக முழங்கால் காயம் குறித்து மும்பையை சேர்ந்த மருத்துவர்களிடம் தோனி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை நிறைவடைந்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது..

இடது முழங்கால் வலியால் பாதிக்கப்படும்போதே ஐபிஎல் போட்டியில் ஓடுவதற்கு சிரமப்பட்டார் என்று செய்தி வெளியானது. இதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார்.. வலியை குறைப்பதற்காக கால் மூட்டுறை (knee cap) என கூறப்படும் மருத்துவ சாதனம் ஒன்றை அணிந்து விளையாடியதும் அனைவரும் அறிந்த விஷயம் இந்நிலையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அவருக்கு முடிவடைந்துள்ளது..