இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கேப்டன் கூலாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். தற்போது எம்.எஸ் தோனி 16-வது ஐபிஎல் போட்டிக்காக சென்னைக்கு வந்துள்ளார். நேற்று முதல் சென்னை அணியின் பயிற்சி முகாம் ஆரம்பமானது. 2023-ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 31-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் அனைத்து வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 26 வீரர்கள் பல்வேறு விமானங்களில் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் கேப்டன் எம்.எஸ் தோனியும் நேற்று சென்னைக்கு வந்தார். விமான நிலையத்திற்கு வந்த எம்.எஸ் தோனிக்கு மலர் தூவி ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற 31-ஆம் தேதி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி கடந்த 2018-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது.

அதன் பிறகு 2019-ல் ரன்னர் ஆப், 2020-ல் 7-ம் இடம், 2021-ம் ஆண்டு மீண்டும் சாம்பியன், கடந்த வருடம் 9-ம் இடம் கிடைத்தது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் எம்.எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதன் பிறகு கடந்த முறை குஜராத் அணி கோப்பையை வென்ற நிலையில் இம்முறை குஜராத் அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் ரசிகர்களின் ஆதர்ச நாயகன், சென்னையின் தலைமகன், கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளில் நிறைந்திருக்கும் எம்.எஸ் தோனி தன்னுடைய கடைசி ஐபிஎல் தொடரில் வெற்றிக் கோப்பையோடு விடைபெற வேண்டும் என்பதுதான் சென்னை அணியினர் மற்றும் ரசிகர்களின் விருப்பம். மேலும் தல தோனியை பார்ப்பதற்காக சேப்பாக்கத்தில் உள்ள களத்தில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.