சென்னி மலையில் சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி துணிகளுக்கு டிசைனராக அப்புசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் போன்ற பல வீரர்களின் உருவத்தை வடிவமைத்து அதனை எலக்ட்ரானிக் தறி மூலம் போர்வையில் வடிவமைப்பார். கடந்த 2 மாதங்களாக அப்புசாமி பல முயற்சிகள் மேற்கொண்டு கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ் தோனியின் புகைப்படம் ஒருபுறமும், விராட் கோலியின் புகைப்படம் ஒருபுறமும் இருக்குமாறு போர்வையை வடிவமைத்துள்ளார்.

கைத்தறி துணிகளில் பெரும்பாலும் இரு பக்கங்களிலும் ஒரே மாதிரியான புகைப்படங்கள் தான் இருக்கும். ஆனால் தற்போது அப்புசாமி ஒரு போர்வையின் இரு பக்கத்தில் எம்.எஸ் தோனி மற்றும் விராட் கோலியின் புகைப்படங்களை உருவாக்கியுள்ளார். இந்த போர்வை 30 இன்ச் நீளம் மற்றும் 20 இன்ச் அகலம் கொண்டது. மேலும் இந்த போர்வை தொடர்பான புகைப்படம் தற்போது வலை தளத்தில் வைரலாகி வரும் நிலையில் அப்புசாமியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.