கர்நாடக காதி மேம்பாட்டுத் துறை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருபவர் பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மடுஹில். அதேபோன்று கர்நாடக மாநில இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக செயல்பட்டு வருபவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி. கடந்த 2021 ஆம் வருடம் மைசூரில் கலெக்டராக பணிபுரிந்து வந்த ரோகிணி சிந்தூரிக்கும், மதச்சார்பற்ற ஜனதாதளம் MLA மகேஷுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக மகேஷ் மீது ரோகிணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் அவர் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று தெரியவந்தது. அதே நேரம் மைசூரு கலெக்டராக இருந்த போது ரோகிணி அரசு கட்டிடத்தில் விதிகளை மீறி நீச்சல் குளம் கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரத்தில் MLA மகேஷ் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி மீது சட்டசபையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு MLA  மகேஷ் மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணியும் தனியார் ஓட்டலில் சந்தித்து பேசிய போட்டோ வைரலாகியது. ஆகவே இந்த விவகாரத்தில் இரண்டு பேரும் சமாதானமாக முயற்சிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா தன் பேஸ்புக் பக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணியின் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதோடு 2021 மற்றும் 2022 ஆம் வருடங்களில் ரோகிணி தன் தனிப்பட்ட புகைப்படங்களை 3 ஆண் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்ததாக ரூபா குற்றம்சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி ரோகிணி மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் ரூபா முன் வைத்துள்ளார். இதுகுறித்து முதல்-மந்திரியிடம் புகாரளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆண் ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் ரோகிணி தன் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததாக ரூபா குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் ரோகிணி கூறியதாவது, ரூபா என் பெயருக்கு கலங்கம் விளைவிக்க தன் புகைப்படங்களை சமூகவலைதள பக்கங்கள், வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வாயிலாக சேகரித்துள்ளார். அதோடு ஐபிஎஸ் அதிகாரி ரூபா மன நல பிரச்சினையில் உள்ளதாக ரோகிணி ஐஏஎஸ் கூறியுள்ளார். இவ்வாறு பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் தனிப்பட்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இருவரும் ஒழுங்கீனமாக செயல்பட்டால் அரசு பார்த்துக்கொண்டிருக்காது நடவடிக்கை எடுக்கும் என்று கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.