சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் வசிக்கும் ஒருவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை நம்பி முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்திய பிறகு அவருக்கு 17 ஆயிரம் ரூபாய் வந்தது.

இதனால் தவணை முறையில் கல்லூரி உதவி பேராசிரியர் 6 லட்ச ரூபாயை முதலீடு செய்தார். ஆனால் கூறியபடி அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. செலுத்திய பணமும் திரும்ப வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கல்லூரி உதவி பேராசிரியர் சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.