கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 35 வருடங்களாக அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு பரத் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் பரத் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த போது மூன்று மர்ம நபர்கள் காரில் வந்தனர். அவர்கள் தாங்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக் கூறியவாறு கடைக்குள் நுழைந்தனர்.

இதனையடுத்து உங்கள் கடையில் புகையிலை பொருட்கள் இருப்பதாக தகவல் வந்தது என கூறி கடையை சோதனை செய்தனர். பின்னர் கடையிலிருந்து சில புகையிலை பொருட்களை கைப்பற்றினர். மேலும் கடையில் இருந்த 2 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். உடனே பரத் பணத்தை ஏன் எடுக்கிறீர்கள் என கேட்டதற்கு அந்த பணத்தை அபராதமாக எடுத்துக் கொள்கிறோம். காவல் நிலையத்திற்கு சென்று கணக்கு காட்டிவிட்டு பணத்தை வாங்கி செல்லுங்கள் என தெரிவித்தனர்.

இதனையடுத்து பரத்தை காரில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி 2 மணி நேரத்திற்கும் மேலாக நகரை சுற்றி வந்தனர். பின்னர் மர்ம நபர்கள் அவரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து நடுரோட்டில் இறக்கிவிட்டு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பரத் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அதிகாரிகள் போல நடித்து பணத்தைப் பறித்த கும்பலை தேடி வருகின்றனர்.