திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாச்சல் கிராமம் குறவன் காலனியில் ரமேஷ்- கல்பனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது மகள் சந்தியாவை மருத்துவம் படிக்க வைப்பதற்காக நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க முடிவு எடுத்தேன். ஆனால் நீட் தேர்வு எழுதாமலேயே எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக கூறி பெங்களூரைச் சேர்ந்த சார்லஸ், அமுது, மோனிகா மற்றும் மார்க் ஆகியோர் ஆசை வார்த்தைகள் கூறினார்கள்.

அவர்களை நம்பி இரண்டு வருடங்களுக்கு முன்பு 16 லட்சத்து 35 ஆயிரத்து 796 ரூபாய் பணத்தை கொடுத்தோம். ஆனால் கூறியபடி அவர்கள் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தர மறுப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சார்லஸ், மோனிகா ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அமுது, மார்க் ஆகியோரை தேடி வருகின்றனர்.