சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வைரவபுரத்தில் அமர்தீப்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் அமிர்தீப் பகுதிநேர வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் ஒரு நாளைக்கு 2,700 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை சம்பளம் தருவதாக கூறியுள்ளார்.

அதற்கு அமர்தீப் சம்மதம் தெரிவித்ததால் அந்த நபர் முதல் தவணையாக அமர்தீப்பின் வங்கி கணக்கிற்கு 10,190 ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து 18,906 ரூபாயை அனுப்பினார். மூன்றாவது முறையாக 85 ஆயிரத்து 700 ரூபாயை அனுப்பினார். இதனை தொடர்ந்து அந்த நபர் அட்வான்ஸ் தொகை கொடுத்தால் அதிக சம்பளம் தருவதாக அமர்தீப்பிடம் தெரிவித்தார்.

இதனை நம்பி அமர்தீப் பல்வேறு தவணைகளாக 6 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் அமர்தீப்புக்கு சம்பளமாக 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். மீதி தொகையை தராமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து அமர்தீப் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.