அரியலூர் மாவட்டத்தில் விகாஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்ன கடை பகுதியில் ஒரு அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர் கடையை  நடத்திவரும் நிலையில் அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வந்துள்ளது. இதன் காரணமாக விகாஸ் தன் தாயை பார்ப்பதற்காக ராஜஸ்தானுக்கு சென்றார். அந்த சமயத்தில் ஆசாத் லோடா என்ற வாலிபர் 15 நாட்களாக அவரது அடகு கடையை பார்த்து வந்தார். இந்த நிலையில் திடீரென ஆசாத் லோடா வை விகாஷால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

கடந்த 3ம் தேதி முதல் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் உடனடியாக விகாஸ் அரியலூருக்கு வந்தார். அப்போது அவர் கடைக்கு சென்று பார்த்தபோது 250 சவரன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளி மற்றும் 5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விகாஸ் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.