சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியில் அமர்நாத் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமர்நாத்தை பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பிரிதிஷா (21), நந்தினி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர். இதில் இளைய மகள் நந்தினி அருகில் உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அமர்நாத் தனியார் கம்பெனியில் வேலை செய்துவரும் நிலையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு உஷா என்னும் மாற்றுத்திறனாளி பெண்ணை 2 வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அமர்நாத் மற்றும் அவருடைய மகள்கள், உஷா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதில் இளைய மகளான நந்தினியை சித்தி உஷா அடிக்கடி வீட்டு வேலை செய்யுமாறு கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த நந்தினி தனது தந்தையிடம் பலமுறை கூறிய நிலையிலும் அமர்நாத் அதனை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாளுக்கு நாள் சித்தியின் கொடுமை அதிகரித்துக் கொண்டே இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான நந்தினி நேற்றிரவு  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக நந்தினியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நந்தினி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். இது தொடர்பாக  நந்தினியின் உறவினரான நிர்மல் குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.